‘ரகசியம்’ என்ற சொல்லுக்கு மறைக்கப்பட்ட என்ற வெளிப்பொருள் இருந்தாலும், ‘உட்பொருள்’ என்ற பொருளும் உண்டு. சரி எந்த பொருளை எடுத்துக்கொண்டாலும், ‘ரகசியம்’ என்றால் வெளிப்படுத்தக் கூடியது அல்லவே?? பின் எதற்கு இது  கசியப்பட்டது? எல்லோர்க்கும் தெரிந்தால் எப்படி ரகசியம் ஆகும்? இது பற்றி நாம் இறுதியில் காண்போம்.

ஆகாசத்தின் ரகசியத்தை நடராஜர் கோவிலில் பொதிந்து வைத்ததே ஒரு நுட்பமான கோர்வை தான். நடராஜரின் அமைப்பே பிரபஞ்சத்தின் சுழற்சி முறையை கூற வல்லது. அவரின் ஒரு கையில் இருக்கும் உடுக்கை பிறப்பையும், இன்னொருகையில் இருக்கும் நெருப்பு பிரபஞ்ச அழிவையும் குறிக்கும். சரி ரகசியத்திற்கு வருவோம். சிதம்பரம் கோவிலில் ரகசியமாவது; நடராஜர் பின் இருக்கும் நீலத் திரையும், ரகசிய அறையும் தான். மிகவும் அபூர்வமான சிவசக்தி சக்கரம் இந்த நீலத் திரையால் மறைக்கப்பட்டிருக்கும். ரகசிய அறையில் ஒன்றுமே கிடையாது. மை பூசப்பட்ட இருட்டான அறை. இந்த அறை பிரபஞ்சத்தின் வெறுமை நிலை (vacuum space). இந்த வெறுமை நிலை விழிப்படைந்து (self-realisation), காலத்தை(Time) உணருகின்றது! பின் வெறுமையின்மையும் (matter), சக்தியும் (energy ) சேர்ந்து படைப்பை தொடங்குகிறது. இது சிவசக்தி சக்கரத்தால் குறிக்கப் படுகிறது. ஒன்று(வெறுமை) இரண்டாக பிரிந்த பின் இரண்டு தானே இருக்க வேண்டும்? ஆனால் இங்கு மூன்று உள்ளதே? அது எப்படி? காலத்தை ஒரேஓட்டமாக பார்க்கும் போது இரண்டு இருப்பது தான் தெரியும். ஆனால் பிரியும் முன் இருந்த நிலையில் ஒன்றும், பிரிந்த பின் நிலையில் இரண்டும் ஆக மொத்தம் மூன்றும் உள்ளது என்பதுதான் உண்மை.

நன்றாக பாருங்கள். இந்து தர்மத்தை பொறுத்த வரையில், கடவுள் எல்லாவற்றையும் படைத்தார் என்பது விட கடவுள் எல்லா படைப்பும் ஆனார் என்றே நம்புகிறது. அதன் வழியே நாமும் கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்று நம்புகிறோம். கடவுள்(மகாதேவம்) என்ற ஒன்று சிவமாகவும் சக்தியாகவும் பிரிந்து, பின் படைப்பு பொருளாக மாறி விட்டதால், நாம் கடவுளை காண முடிவதில்லை. அந்த ஆதி என்பது திரிந்து விட்டதாக தான் நாம் உணருகிறோம். ஆனால், அது வெறும் மாயை தான். பிரபஞ்ச தோற்றத்திற்கு முன் கடவுள், அதற்கு பின் கடவுள் என்ற பிரிபடும் நிலை நமக்கு புரியவில்லை. அதை புரிந்து கொள்ள விடாமல் காலம் மாயை செய்கிறது. அந்த மாயையை குறிப்பது தான் நீலத் திரை. இதை பொருளியல் முறையில் சொல்ல வேண்டுமானால், பிரபஞ்சத்தின் வெறுமை நிலையை நம்மால் கற்பனை செய்ய முடியுமா? எப்படி செய்வீர்கள், வெறும் இருட்டாகவா? ஆனால் அதுவும் ஒரு நிலை தானே ? வெறுமை இல்லையே ?  எப்பொழுது நாம் மாயையிலிருந்து மீண்டு, தூய வெறுமை தரிசிக்கிரோமோ, அன்று பிரபஞ்ச ரகசியங்கள் வெளிப்பட துவங்கும். வெறுமை எப்படி எல்லாவற்றையும் உருவாக்கி, காலத்திற்கு கூட அழிவு விளைவிக்கிறது என்பதை அறிவதே சிதம்பர ரகசியம்!

ஆனால் அதை எப்படி அறிவது என்பது தான் கேள்வி. இந்த பிரபஞ்சத்தில், நாம் ஒரு ரகசியத்தை (இந்த இடத்தில் ‘Mystery’ என்கிற பொருளில் கொள்க) எடுத்து அதற்கு விடை காணும் போது, இன்னும் சில ரகசியங்கள் வெளிப்படுகின்றன!!(answer to  one mystery unravels questions on few more mysteries). பிரபஞ்சத்தின் பிறப்பு , இறப்பு மற்றும் இயக்கம் ஆகியவைகளின்   பொருள் காண்பது தான் இந்திய ஞான தரிசனங்களின் நோக்கம். சாங்கியம் , பூர்வ மீமாம்சம், உத்ர  மீமாம்சம், நியாயம் , வைசேசிகம், யோகம்  இவை ஆறும் ஹிந்து மத தரிசனங்கள். ‘சார்வகம்’ என்ற தரிசனம் நாஸ்திக தரிசனம். ‘நாஸ்திக’ என்றதும் கருப்பு சட்டைகாரர்களுக்கு மிகவும் தெரிந்த தரிசனம் என்று என்ன வேண்டாம். அரைகுறை நாஸ்திகர், அரசியலுக்காக நாஸ்திகம் பேசுவோர், வெறும் அறிவுஜீவிகள் போல படம் காட்டுவோர் இதை எல்லாம் படித்து விட்டு பேசுவோர் அல்ல. இந்த தரிசனங்கள் எல்லாம் பிரபஞ்ச இயக்கம் குறித்து பற்பல கோணங்களில் அலசுபவை. வேதங்கள், வேதாந்தங்கள், உபநிசதங்கள், சாஸ்திரங்கள் போன்றவை அதற்கு உதவிபுரிகின்றன.  நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு பதில் இதுதான். ஆகாச ரகசியத்தை நாம் இன்னொருவர் கூறுவதை கொண்டு மட்டுமே முழுமையா அறிந்தது விடுவது இயலாதது. ரகசியத்தை ஒவ்வொரு படைப்பிலும் வைத்திருக்கிறான் இறைவன். “அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு” என்று ஒரு தமிழ் பழமொழி. இந்த தரிசனங்கள், தகவல்கள், அறிவியல் சூத்திரங்கள், விஞ்ஞானிகளின்  விளக்கங்கள் இவை எல்லாம் தளமாக அமைத்துக் கொண்டு, பிரபஞ்ச ரகசியத்தை வெளியில் அல்ல, உள்ளில் இருந்து தேடவேண்டும். உள்ளே மண்டையில் ஒன்றுமே இல்லையே என்று என்ன வேண்டாம்; ஒன்றுமே இல்லாத பிரபஞ்சத்திலிருந்து தான் எல்லாமே பிறந்தன!!!

– பிரகாஷ் ருத்ரன்